ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி- அவரை திருத்தவே முடியாது




Pasumai Nayagan பசுமை நாயகன்


        இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation - Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ. அதில் சில பகுதிகள்... 

   இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. 

   இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

    நூலாசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு லீ அளித்துள்ள பதில்கள்... இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மை யினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. 

   அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமை யோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். 

   அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்து கொண்டி ருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்த வரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும் தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர் களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ. இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். 

   இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ க்வான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.