குஜராத் முதல்வர் இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் சந்திப்பு

   குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்தை இன்று சந்திக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதியை அறிவிக்க வேண்டும் என்ற விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று, கட்சித் தலைவர் நிதின் கட்கரிக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி கடிதம் எழுதி இருந்தார். அதோடு இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திடம் தான் பேசியதாகவும், அவரும் தனது கூற்றை ஆமோதித்ததாகவும் ஜெத் மலானி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக மோதி அறிவிக்கப்படுவாரா என்ற விவாதம் முக்கியத்துவம் பெற்றது. இதனிடையே குஜராத் சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் நரேந்திர மோதி, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்திக்க உள்ளார். இது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.
உள்ளூர் பிரச்சனைகளை பற்றி பேசி வாக்குகளைப் பெறமுடியாது என்பதால்தான், தேசிய அளவில் தன்னை முன்னிறுத்தும் முயற்சிகளில் மோதி ஈடுபட்டு வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாதியா விமர்சித்துள்ளார்.
குஜராத்தின் முன்னாள் பா.ஜ.க. முதலமைச்சரும், அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி இருப்பவருமான கேஷூபாய் பட்டேல், மோதி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வரும் நரேந்திர மோதியை இம்முறை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்பதில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. எனினும் மாநிலத்தின் வேகமான வளர்ச்சிக்கு தனது அரசு ஆற்றிய பணிகள் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக நரேந்திர மோதி கூறி வருகிறார்.