குமரிக்கண்டம்


         ஆங்கிலேயன் நம் நாட்டை விட்டுப்போய் 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் நம்மை பல நூறு வருடங்கள் ஆண்டது பெரிய விஷயம் அல்ல. ஆனால், நம் மனதில் நம் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவை எல்லாமே மிகவும் தாழ்வானது என்றும், அதில் பெருமை கொள்ள ஏதும் இல்லை என்றும் ஒரு மனநிலையை ஏற்படுத்திவிட்டானே... அது தான் கொடுமை. இந்த மனோ நிலை தலைமுறை தலைமுறையாக நம் மனதில் வேரூன்றிவிட்டது. இதனால் தான் நம்மை நினைத்து நமக்கு பெருமையும் இல்லை.... மகிழ்ச்சியும் இல்லை. நம்மூரில் சில வீடுகளில் ஒரு குழந்தை தன் அம்மாவை "மம்மி" என்று தான் கூப்பிடுகிறது , மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்பது தெரியாமல். நாம் நம் மொழியை, அடையாளத்தை, கலாச்சாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா ?
ஆயினும், ஓர் ஆச்சரியம் என்னவென்றால் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்படும் நம் தாய்மொழியாம் தமிழின் சிறப்பைப் பற்றி நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அயல் நாட்டவர்க்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிபர் மாளிகையில் தமிழ்,ஆங்கிலம், ரஷியம், சீனம், என்று 4 மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏன் என்று கேட்டதற்கு "ரஷிய மொழி எங்கள் தாய்மொழி. ஆங்கிலம் இன்று உலகத்தின் பல பகுதிகளில் பேசப்படும் மொழி. இன்னும் இரண்டு பழமையான மொழிகளில் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவை தான் உலகின் மிகப் பழமையான மொழிகள். அவற்றில் கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அதனால் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழிலும், சீனத்திலும் பெயர் பலகைகள் வைத்துள்ளோம்" என்று பதில் சொல்கிறார்கள்.
நம் தமிழ்மொழி பழமையானது என்று கூறும் போது அது எவ்வளவு பழமையானது என்று கேட்டால் பெரும்பாலனவர்கள் 2000 ஆண்டுகள் என்று பதில் சொல்கிறார்கள். இது சரியான பதில் தானா ?
நம் நாகரிகத்திற்கு வயது வெறும் 2000 ஆண்டுகள் அல்ல, சுமார் 10,000 ஆண்டுகள் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
நம்ப முடியவில்லையா ? இந்தியப் பெருங்கடலுக்கடியில் சற்று போகலாம் வாருங்கள்.
தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய இந்தியாவின் தென் பகுதி எப்படி இருந்தது என்று இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.
இந்த வரைபடத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில், அதாவது இன்றைய குமரிமுனையில் இருந்து தெற்கே வெகு தூரம் நீள்கிறதே அந்தப் பகுதியைத் தான் குமரிக்கண்டம் என்று அழைக்கிறார்கள். இதன் பரப்பளவு 2300 மைல்கள் வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த மண் தான் நம் மூதாதையர்கள் பிறந்த மண்ணென்றும், இதை லெமூரியா கண்டம் என்றும் சில பேர் அழைக்கிறார்கள். இந்தப் பகுதியை , முதலில் காய்சினவழுதி பாண்டியன் என்ற மன்னன் ஆண்டான் என்றும், இதன் தலை நகரம் தென்மதுரை என்றும் , இதில் ஏழுபனைநாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழுமதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு என்று 49 நாடுகள் இருந்ததாகவும், பஃறுளி , குமரி ஆகிய இரண்டு ஆறுகள் ஓடியதாகவும், குமரிமலை என்ற மலை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழகம், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி (கடல் கோள்) ஏற்பட்டது நம் அனைவருக்கும் தெரியும் . அதே போல் சுமார் 10,000 - 15,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு கடற்கோள் ஏற்பட்டதாகவும், அதில் இந்தக் குமரிக்கண்ட நிலப்பகுதி அழிந்து போனதாகவும் நிலவியலாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தக் கூற்றை மெய்ப்படுத்தும் விதமாக,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."
என்ற சிலப்பதிகார வரிகள் சொல்லப்படுகின்றன.
இது ஒரு புறமிருக்க, தமிழ் மேல் இருந்த அளப்பரிய பற்றினாலும் , பக்தியாலும், பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்றும், முதல் சங்க காலம் கி.மு 14,000 முதல் 9500 வரை நடந்ததாகவும், இதில் 89 பாண்டிய மன்னர்களும் , 4449 புலவர்களும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல் சங்கத்தில் பரிபாடல், முதுநரை, முதுகுருகு , பேரகத்தியம் உள்ளிட்ட நூல்கள் இயற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென நிகழ்ந்த கடற்கோளால் பாண்டி நாடும் முழுமையாய் அழிந்து , தலைச்சங்க நூல்களும் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதை அடுத்து “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரம் என்னும் நகரத்தை அமைத்து அதில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை அமைத்தான் என்றும், இதன் கால கட்டம் கி.மு 9,200 முதல் 5500 என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்கள் பல இலக்கியங்களை படைத்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகிராமாயணம், வியாச பாரதம் போன்றவற்றின் மூலமாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது.
"இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியைச் சுட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் காலத்திலும் மீண்டும் ஒரு கடற்கோள் ஏற்படவே பாண்டிய நாடு அழிந்து போனதாகவும், இதில் தொல்காப்பியம் என்ற நூல் மட்டும் தப்பி பிழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதோடு நிற்கவில்லை.
கபாடபுரம் அழிவுற்ற பிறகு பாண்டி நாட்டையும் தமிழ்ச்சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான் என்றும் இந்தச் சங்க காலம் 1850 ஆண்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தான் நம்மிடையே இருக்கின்றன.
சுமேரியன் நாகரிகம் 4000 ஆண்டுகள் பழமையானது. சிந்து சமவெளி நாகரிகம் 5000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் குமரிக்கண்டமும் , குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகா நகரமும் குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இதைப் பற்றி கிரகாம் ஹான்காக் என்ற இதழாளர் "UNDERWORLD" என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தியாவின் NIO(National Institute Of Oceanography) என்ற நிறுவனத்தின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் நாகை கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தொலைவில் 70 அடி ஆழத்தில் 2 மீட்டர் உயரத்தில் "U" வடிவில் ஒரு வடிவம் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், இந்த வடிவங்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். மேலும், இந்த வடிவத்தைக் கட்டுவதற்கு மிக உயர் ரக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,இன்னும் நூறடி ஆழத்தில் பல வடிவங்கள் இருக்கலாம் என்றும் ஹான்காக் சந்தேகிக்கிறார். இதைத் தவிர இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தனது "Underworld" என்ற நூலில் தருகிறார் ஹான்காக்.
இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் நம் நாகரிகம், குறைந்தது 10,000 ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிவிடும். கலாச்சாரமே இத்தனை ஆண்டுகள் பழமையானது என்றால் நம் மொழி எத்தனை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
இவை குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய அரசு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கினால் நம் நாகரிகம் பற்றிய பல உண்மைகள் வெளி வரும்.
ஆனால் அது நடக்குமா ? தமிழன் தலை நிமிர்ந்து நிற்பானா ?