இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி





இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி

       க்கள் நகரங்களிலும், கிராமங்களிலும் வசிப்பார்கள். இன்னும் சிலர் காடுகளில் வசிப்பார்கள். அப்படியில்லாமல் கடலிலேயே வசிக்கும் மக்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
     நிரந்தர இருப்பிடம் இல்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை நாடோடிகள் என்போம். ஆனால், மோக்கன் (MOKEN) என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் கடலிலேயே நாடோடிகளாக வாழ்கிறார்கள். இந்தப் பழங்குடியினர் கடலை விட்டு பிரிவதில்லை. எப்போதாவதுதான் நிலப் பகுதிக்கு வருவார்கள்.
    தாய்லாந்து, மியான்மார் போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் அந்தமானிலும் இந்த இனத்தவர் அதிகம் காணப்படுகின்றனர். கடலைப் பற்றியும், கடலில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தைப் பற்றியும் இவர்களிடத்தில் அபார அறிவு காணப்படுகிறது. சிறிய வலைகள், ஈட்டி போன்றவற்றை கொண்டு இந்த மோகென் மக்கள் கடல் வேட்டைக்கு செல்கின்றனர். தங்களுக்குத் தேவையான உணவபு பொருள் தவிர, பிற உட்கொள்ள முடியாத பிற பொருட்களை எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
 மோக்கன் மக்களின் முதல் எதிரி
     எந்த உபகரணத்தின் உதவியும் இன்றி, கடல் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை துல்லியமாக பார்க்கும் திறன் இந்த இனச் சிறுவர்களுக்கு கூட உண்டு.கபாங் எனப்படும் இவர்களே தயாரித்த படகுகளில் கடலை சுற்றியபடியே வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படகுகள் வெறும் போக்குவரத்துக்கு மட்டுமன்றி, பெரும்பாலான நேரங்களில் சமையலறையாகவும், படுக்கையறையாகவும் கூட மாறிவிடுகின்றன.
    2004ஆம் ஆண்டு சுனாமியில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தபோதும், கடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாக அறிந்த இந்த மோக்கன் மக்கள் தங்கள் உயிரை சுலபமாக காத்துக்கொண்டனர். நூற்றுக் கணக்கானோரை காப்பாற்றவும் செய்தனர். அதன் பிறகுதான் ஊடகங்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.
    இப்படி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி, எண்ணெய் எடுக்கும் திட்டங்கள்தான். கடலிலுள்ள எண்ணெய் வளங்களை எடுப்பதற்காக, அரசுகளும், நிறுவனங்களும் இவர்களை வலுக்கட்டாயமாக இடம் பெயரச் செய்கின்றன. மியான்மர் அரசு இவர்களை வெளியேற்ற ராணுவத்தைப் பயன்படுத்தியது. கடலோடு மட்டுமே வாழ தெரிந்த இந்த பழங்குடியினரை கட்டாயத்தின்பேரில் இயற்கையிடமிருந்து பிரிக்கும் முயற்சிகளுக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.